ஆந்திர மாநிலம் பொந்தூர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணா. விவசாயியான இவர் ஸ்ரீகாக்குளம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றார். ஆனால் பல முறை முயற்சி செய்தும் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சத்திய நாராயணா அருகில் இருந்த நாற்காலியை எடுத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார்.
இதில் எந்திரம் சேதமடைந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஏ.டி.எம். காவலாளி, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சத்திய நாராயணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.