Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து துறையை தனியாருக்கு தாரை வார்ப்பது நியாயமா…? இதுதான் திராவிட மாடலா….? சீமான் ஆவேசம்….!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்து துறையில் உள்ள பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த செயல் மாநில அரசின் நிர்வாக திறமையையும், ஊழலையும் குறிக்கிறது. கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் போக்குவரத்து கழகம். கடந்த 50 வருடங்களாக 20,000 பேருந்துகள் ஏழை எளிய மக்களின் நலனுக்காக மட்டுமே இயங்குகிறது. அதன்பிறகு கிராமப்புற  மக்களின் நலனுக்காக இலாப நஷ்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இயங்குவதால் கிராமப்புற வளர்ச்சிக்கு அரசு பேருந்துகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனையடுத்து தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலமாக இரு திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி புரிகிறது. இந்த திராவிட கட்சிகள் கட்டுக்கடங்காத ஊழலையும், நிர்வாக திறமையையும் மட்டுமே கொண்டிருக்கிறது. இதனால்தான் போக்குவரத்து கழகம் 42 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் கூட உரிய முறையில் வழங்குவதில்லை. இந்நிலையில் நிதி அமைச்சர் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் போக்குவரத்து சேவையில் தனியாரை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். இதற்கு நாம் தமிழர் கட்சி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் சென்னையில் உள்ள 1,000 பேருந்துகளை முதற்கட்டமாக தனியார் வசம் ஒப்படைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கையால் சிறிய கிராமங்களுக்கு பேருந்துகள் நிறுத்தப்படுவதோடு, முற்றிலும் இலாப நோக்கிற்காக மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். இதைத்தொடர்ந்து  பண்டிகை காலங்களில் தனியார் முதலாளிகள் கட்டண கொள்ளையிலும் ஈடுபடுவார்கள். அதுமட்டுமின்றி 200,00 ஊழியர்களின் பணியும் கேள்விக்குறியாகும். மேலும் பிரதமர் நரேந்திர மோடி ரயில்வே நிர்வாகம், வங்கி, காப்பீடு, விமானம் போன்ற பல்வேறு துறைகளை தனியார் வசம் ஒப்படைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க அரசு மாநில அரசின் போக்குவரத்து துறையை‌ மட்டும் தனியார் வசம் ஒப்படைப்பது நியாயமா? இது தான் திராவிட மாடலா? என‌ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் போக்குவரத்து துறையை தனியார் வசம் ஒப்படைப்பது பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |