Categories
தேசிய செய்திகள்

இறந்த தன் சகோதரரின் உடலை…. மடியில் வைத்து ஆம்புலன்சுக்காக காத்திருந்த அண்ணன்…. நெஞ்சை உருக்கும் வீடியோ….!!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 8 வயது சிறுவன் இறந்த தன் 2 வயது சகோதரரின் உடலை மடியில் வைத்து ஆம்புலன்சுக்காக காத்திருந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. மத்தியபிரதேச தலைநகர் போபாலிலிருந்து 450 கி.மீ தூரத்தில் மொரோனா மாவட்டம் இருக்கிறது. இங்கு உள்ள மாவட்ட ஆஸ்பத்திரியில் அம்பா என்ற பகுதியைச் சேர்ந்த பூஜாராம் என்பவர் தன் 2 வயது மகனை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளார். அப்போது 2 வயது சிறுவனுக்கு நுரையீரல் தொடர்பாக நோய் இருந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அச்சிறுவனை தன் வீட்டிற்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்ய முயற்சித்துள்ளார். இவரின் கிராமம் மருத்துவமனையிலிருந்து 30 கிமீ தொலைவில் இருக்கிறது.

இதற்கிடையில் மருத்துவமனை தரப்பு பூஜாராமிடம் இலவச ஆம்புலன்ஸ் சேவை தற்போதைக்கு இல்லை என்று கைவிரித்துள்ளது. இதனால் தனியார் ஆம்புலன்சை ஏற்பாடு செய்யும் அளவுக்கு பூஜாராமிற்கு வசதி இல்லாததால், தன் மற்றொரு மகனான குல்ஷானிடம் 2 வயது மகனின் உடலை ஒப்படைத்துவிட்டு மாற்று ஏற்பாடுக்காக சென்றுள்ளார். தன் 2 வயது தம்பியின் உடலை மடியில் வைத்துக்கொண்டே 8 வயது சிறுவன் குல்ஷான் தந்தையின் வருகையை எதிர்பார்த்து அரை மணி நேரத்திற்கும் மேலாக பொது வெளியில் அமர்ந்துள்ளார். இக்காட்சி காண்போரின் நெஞ்சை உலுக்கி இருக்கிறது. இந்த நிலையில் இதைக் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி யோகந்திரா சிங் உடலை பூஜாராம்மின் சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்சை ஏற்பாடு செய்து உதவியிருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி மத்திய, மாநில பா.ஜ.க அரசு கடுமையாக விமர்சித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தன் டுவிட்டர் பதிவில், மத்திய பிரதேச மாநிலத்தின் சுகாதாரத்துறை நிலைமையை நெஞ்சை உருக்கும் இந்த காட்சிகள் பிரதிபலிக்கிறது. இதுதான் பிரதமர் மோடியின் நல்லாட்சியின் உண்மை முகம் என்று கூறி விமர்சித்துள்ளது. இது பற்றி மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஷ்ரா கூறியதாவது, “ஆம்புலன்ஸ் மறுக்கப்படவில்லை. வீடியோ தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை.

கிராமத்தில் இருந்து தினக்கூலி தொழிலாளி ஒருவர் தன் மகனை மருத்துவமனைக்கு அழைத்துவந்த போதே உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருந்தது. மருத்துவமனையில் சிறுவனின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாகக் கூறினர். அதன்பின் அவர் சிறுவனின் உடலை மற்றொரு மகனிடம் கொடுத்துவிட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றபோது தான் அந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |