மர்ம நபர்கள் இன்ஜினியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் ஜலாலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவில் இன்ஜினியரான முகமது பீர்கான்(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகமது அவரது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக சென்றனர். அவர்களை மெதுவாக செல்லும்படி முகமது கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த மர்ம நபர்கள் முகமது பீர்கானை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த முகமது தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அறிந்த முகமது பீர்கானின் உறவினர்கள் பேட்டை முனிசிபாலிட்டி பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.