திருத்தணி முருகன் கோவிலில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றியதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் வருகின்ற 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா நடைபெற இருப்பதால் ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு வருவாய்த்துறையினர் மற்றும் கோவில் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனால் தாசில்தார், கோவில் ஊழியர்கள், போலீசார் பாதுகாப்புடன் இருபதுக்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை அகற்றினார்கள். மேலும் கோவில் மேலே இருக்கும் பழக்கடை, பூக்கடை, பிரசாத கடை, குளிர்பான கடை உள்ளிட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு துணை ஆணையர் தெரிவித்தார். மேலும் இரண்டு தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தார்கள். இதனால் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.