பொதுமக்கள் திடீரெனபோராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட வருவாய் துறை அதிகாரி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பிறகு ஏரிக்கரையை ஒட்டி இருந்த 2 வீடுகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டது. மேலும் மற்ற ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட வருவாய் துறை அதிகாரி கூறியுள்ளார்.