மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் விவசாயியான குமார்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தேசிங்கு(40) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் மேல்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இது விபத்தில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தேசிங்கை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.