திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகள், ஓட்டல் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் அமைச்சராக இருந்தபோது தனது குடும்பத்தினரின் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக புகார் எழுப்பப்பட்டது. புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 44 லட்சம் அளவுக்கு சொத்துக்களை சேர்த்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று காலை முதல் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காமராஜுக்கு தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்ததாவது:” லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி அறிக்கை வெளியிட்டது. ஆனால் சோதனையில் எதுவும் கைப்பற்ற படவில்லை.
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டதை விட எனக்கு அதிக கடன் உள்ளது. எனது மகன்கள் இருவர் மருத்துவர்கள். அவர்கள் இருவருக்கும் வங்கியில் பல கோடி கடன் வாங்கி தான் தஞ்சாவூரில் மருத்துவமனை கட்டுகிறோம். அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் வேகத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பலி வாங்கும் நடவடிக்கை. இதனால் அதிமுக தொண்டர்களை தொட்டுக் கூட பார்க்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.