ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே மரணமடைந்ததை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார்.
ஜப்பான் நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற மேல் சபை தேர்தல் நடைபெற இருப்பதால், நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே நாரா என்னும் நகரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
மயக்கம் அடைந்த வரை பாதுகாவலர்கள் உடனடியாக ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.
அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில், என் அன்பு நண்பரான ஷின்சோ அபேயின் மரணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அதிர்ச்சி மற்றும் கவலையை தந்திருக்கிறது. அவர் சிறப்பான தலைவர், உலகத்தையும், ஜப்பான் நாட்டையும் சிறப்பாக மாற்றுவதற்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்.
என் அருமை நண்பர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நினைத்து கடும் வேதனை அடைந்திருக்கிறேன். சமீபத்தில் ஜப்பான் சென்ற போது அவரை சந்தித்தேன். அது தான் எங்களின் இறுதி சந்திப்பாக இருக்கும் என்று அப்போது நான் நினைத்து பார்க்கவில்லை. அவரின் குடும்பத்திற்கும், நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று கூறியிருக்கிறார்.