உலக சுகாதார மையம் குரங்கு அம்மை நோய் பரவல் 77 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
கொரோனா வைரஸ் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலக நாடுகளை புரட்டிப் போட்டது. மக்களின் வாழ்வாதாரத்தையும் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக பாதிப்படைய செய்தது. தற்போது வரை, கொரோனா முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவிக் கொண்டிருக்கிறது.
ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகமாக குரங்கு அம்மை பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 59 நாடுகளில் 6027 நபர்களுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த மாதம் 27ஆம் தேதிக்கு பிறகு சுமார் 77% குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்த பாதிப்பால் ஆப்பிரிக்காவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் தெரிவித்திருப்பதாவது, குரங்கு அம்மை பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஐரோப்பாவில் இந்த பாதிப்பு 80%-ஆக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.