இணையதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்புபவர்களுக்கு 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை ஹின்னா ஹிமுரா (20)இணையதளத்தில் ஒருவர் அவதூறான கருத்துக்களை பரப்பியதால் மனம் உடைந்து கடந்த 2020-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இணையதளத்தில் அவதூறான கருத்துக்களை பரப்புபவர்கள் மற்றும் சைபர் மிரட்டல் விடுப்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் காரணமாக ஜப்பான் பாராளுமன்றம் ஒரு புதிய சட்டத்தை தற்போது இயற்றியுள்ளது. அதன்படி இணையதளத்தில் அவதூறான கருத்துக்களை பரப்புபவர்கள் மற்றும் சைபர் மிரட்டல் விடுப்பவர்களுக்கு 1 வருடம் சிறை தண்டனை மற்றும் 3,00,000 யென் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 1 மாதம் சிறை தண்டனை மற்றும் 30,000 யென் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.