இலங்கையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் 2 நாளாக காத்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்படைந்து இருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் அந்நாட்டிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்போர்ட் பெற கொழும்பு நகரில் இருக்கும் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் மிக நீளமான வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்.
அவர்களை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஸ்போர்ட் அலுவலகத்தின் முன் வரிசையில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் அவரின் கணவரும் இரண்டு நாட்களாக காத்திருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை நேரத்தில் திடீரென்று அந்த பெண் பிரசவ வலியால் துடித்தார்.
உடனடியாக ராணுவ வீரர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்திருக்கிறது.