மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு கடல் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லாரி பேட்டை மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலை பகுதியில் மீன் சந்தை அமைந்துள்ளது. இங்கு கேரள மாநிலத்தில் உள்ள திரூர், மங்களாவரம், தூத்துக்குடி ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக வரும். இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் மீன் வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாக மீன் சந்தைகளில் கடல் மீன் விலையானது அதிகரித்துள்ளது. அதன்படி இறால் கிலோ 500 ரூபாய்க்கும், மத்தி 250 ரூபாய்க்கும், ஊளி 500 ரூபாய்க்கும், நெத்திலி 350 ரூபாய்க்கும், பாறை 600 ரூபாய்க்கும், வாவல் மீன் 1100 ரூபாய்க்கும், வஞ்சிரம் 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடல் மீன்களின் விலை 2 வாரத்திற்கு அதிகரித்துதான் காணப்படும் என்று மீனவர்கள் கூறியுள்ளனர்.