தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பள்ளி மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும். திருப்பி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அனைத்து பள்ளி மாணவர்களும் பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர அனுமதி கிடையாது. மீறி கொண்டு வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். திரும்பி வழங்கப்படாது.
பிள்ளைகள் மொபைல் போன் கொண்டு வராமல் பெற்றோர்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும். மொபைல் போன் கொண்டு வராமல் மாணவர்களை தடுக்கும் வகையில் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் சோதனை நடத்த வேண்டும். அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று மாணவர்கள் பயணம் செய்யக்கூடாது. வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் இருக்கக்கூடாது. எல்லா பாட வேலைகளிலும் வகுப்பறையில் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உணவு இடைவேளையில் பாதுகாப்பான இடத்தில் மாணவர்கள் தனித்தனியே அமர்ந்து உணவு உண்ண வேண்டும். தனியார் வாகனங்களில் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வாகனங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொருளாளர் நியமிக்க வேண்டும். எந்தவித முன் தகவலும் இன்றி மூன்று நாட்கள் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் பெற்றோரிடம் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும். அதன் விவரத்தை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவ மாணவியரின் ஒழுக்க நடைமுறையில் எந்த சமரசமும் செய்யக்கூடாது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.