தேனி மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து உயிரோடு எரித்து கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுமி,அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பணியாளராக வேலை பார்க்கும் தனது பாட்டியுடன் தங்கி வந்துள்ளார். இந்த சிறுமியின் தாய் வேறு திருமணம் செய்து கொண்டு குழந்தையை விட்டு சென்றதால் பாட்டி குழந்தையை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் தன் பாட்டியுடன் அங்கன்வாடி சென்று இருந்த சிறுமி பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது உடலில் திடீரென தீ பற்றிய நிலையில் ஓடி வந்தார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து சிறுமியை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சிறுமி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறியுள்ளார்.
அதாவது விஜயகுமார் என்ற 20 வயது இளைஞர் சிறுமியை விளையாட அழைத்து செல்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அதன் பிறகு கொலை செய்வதற்காக ஆடையில் தீ வைத்து விட்டு தப்பி ஓடினார். இது தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.