கோவை – திருச்சி சாலையில் புதியதாக மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் அதி வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 வாலிபர்கள் தடுப்பு சுவரில் மோதி தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்து தடுப்பு பணிக்காக மூடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க வேகத் தடை அமைக்கும் பணிகள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் அறிவிப்பு பலகைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது “கோவை-திருச்சி மேம்பாலம் முழுதும் முக்கியமாக 10 இடங்களில் சிறிய வேகத்தடைகள் அமைக்கப்படுகிறது. இதன் வாயிலாக வாகனங்களின் வேகமானது கட்டுப்படுத்தப்படும். அத்துடன் அபாயபகுதி பற்றி விளக்க படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் மேம்பால சாலையில் 1000 ஒளிரும் பட்டைகள் பொருத்தப்படுகிறது. அதாவது மேம்பால சாலை பிரியும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்று (ஜூலை.5) முடிவடையும். ஆகவே விபத்து தடுப்பு பணிகள் முடிந்து நாளை (அல்லது) நாளை மறுநாள் திருச்சி ரோடு மேம்பாலம் பொதுமக்கள பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.