தமிழக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் டாட்டா பவர் நிறுவனம் ரூபாய் 3000 கோடி முதலீடு செய்துள்ளது.
சென்னையில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. 70 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு’ என்ற பெயரில் மாநாட்டை அரசு நடத்தி வந்தது. இதில் துபாய், அபுதாபி நாடுகளுக்கு சென்று ரூபாய் 6000 கோடிக்கு அதிகமான முதலீடுகளை ஈர்த்து வந்தார் முதல்வர் மு க ஸ்டாலின். இதுவரை 94 ஆயிரத்து 925 கோடி தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.
இதன் மூலம் 2. 26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை 10 மணி அளவில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தங்களால் 70 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு கிடைக்கும் என்றும், 70000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் டாட்டா பவர் நிறுவனம் 3000 கோடி முதலீடு செய்துள்ளது. அதன்படி திருநெல்வேலியில் சோலார் தட்டுகள் மற்றும் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசும், டாடா நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளது. 16 மாதங்களில் இந்த திட்டங்கள் தயாராகும் எனவும், இதன் மூலம் நேரடியாக 2000 பேருக்கு பணிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.