மன்னார்குடி நகராட்சி பெண் கணக்காளர் வங்கி காசோலையில் போலி கையெழுத்து போட்டு, 10 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் 2 ஆண்டுகளாக கணக்காளராக சரஸ்வதி என்ற பெண் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 29-ஆம் தேதி 2, 50, 000 ரூபாய் மதிப்பிலான நகராட்சி காசோலையை பணமாக மாற்றி கொண்டு வருமாறு உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.அவரும் அந்தக் காசோலையை கொண்டு சென்று வங்கியில் கொடுத்துள்ளார். அப்போது, அதில் முன்னாள் நகராட்சி ஆணையாளரின் கையெழுத்து இருந்ததை வங்கித் தரப்பினர் கண்டுபிடித்து விட்டனர்.
இதையடுத்து சரஸ்வதியிடம் நடத்திய விசாரணையில் முன்னாள் ஆணையர் ஜெகதீஸ்வரியின் கையெழுத்தைப் போட்டு, பணத்தை எடுக்க முயன்றது தெரியவந்தது. மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் 10 லட்சம் ரூபாய் வரை இதுபோன்று கையாடல் செய்திருப்பது தெரியவந்ததையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.