ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் சுமார் 418 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த 29-ஆம் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குலசேகரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், அழகிய மண்டபம் ஆகிய 5 இடங்களில் இருந்து நாளை முதல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவட்டருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதனை அடுத்து கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால் வாகனங்கள் நிறுத்துவதற்காக முதற்கட்டமாக 7 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணிக்கு குமரி மாவட்ட போலீஸ் தவிர தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் இருந்தும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.