எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா அண்மையில் தமிழகம் வந்திருந்த நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு நேற்று தமிழகத்திற்கு வந்துள்ளார். சென்னை வந்த திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் குழு திரௌபதி முர்மு வெற்றி பெற துணை நிற்போம். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பழங்குடியின பெண்ணை முதல்வர் மு க ஸ்டாலின் ஆதரிக்கவில்லை.
திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் சமூக நிதி என பேசி மக்களை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி வருகின்றார். திமுக காங்கிரஸ் சூழ்ச்சியால் 2012 குடியரசு தலைவர் தேர்தலில் பி.ஏ. சங்மா வெற்றி பெற முடியவில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, குடியரசு தலைவரின் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனக்கே தெரியாத சமூக நீதிப் பற்றி திமுகவிற்கு பாடம் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். பட்டியலின சமூகத்தில் இருந்து கே ஆர் நாராயணனை குடியரசுத் தலைவர் ஆக்கியது திமுகவின் கருணாநிதியும் தான். லோக்சபா சபாநாயகராக ஜகஜீவன்ராம் மகள் மீரா குமார் தேர்வு செய்யப்படுவதற்கு திமுக உறுதுணையாக இருந்துள்ளது.
பட்டியலின பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தியது, உள் இட ஒதுக்கீடு அளித்தது உண்மையான சமூக நீதியை அளித்தது, திமுக அரசும் கருணாநிதியும் தான். இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. அதனை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலும் அவர் தற்போது இல்லை. ஜெயலலிதா அமர்ந்த பொது செயலாளர் பதவியில் தான் எப்படி குறுக்கு சால் ஒட்டி அமருவது அதற்கு கோடி கோடியாக கரன்சி நோட்டுகளை எப்படி அள்ளி விடுவது என்று ஆலோசனையில் அவர் மூழ்கி இருப்பதால் யாரின் கட்சி கீழ் இருக்கிறது என்பது தெரியாமல் தவித்து வருகின்றார். அதிமுகவிற்கு ஒரு தலைமை கழகம் இருந்தும் அங்கே குடியரசு தலைவர் வேட்பாளரை அழைத்து தங்கள் ஆதரவை கொடுக்க முடியாமல் பிளவு பட்டு ஆளுக்கு ஒரு பக்கம் நின்று தண்ணீர் பாட்டில் வீசிக்கொண்டிருக்கும் பழனிசாமி போன்றவர்களுக்கு நாவடக்கம் முதலில் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.