கடலூர் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண்மை துறை அமைச்சரும் போதுமான அளவு உரம் இருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட டெல்டா வட்டாரங்களில் குருவை பருவத்திற்கான நெல் விதை இருப்பு மாற்று பயிர் விதை இருப்பு உரம் இருப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை கடலூர் வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கீரப்பாளையம் வட்டாரத்தில் கீரப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக வழங்கப்பட இருக்கின்ற குறுவை தொகுப்பு திட்டத்திற்கு தேவைப்படும் உரங்கள் இருப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அப்போது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு இருக்கின்ற உரங்கள் விவசாயிகளுக்கு சென்று அடைந்திருக்கிறதா என தொடர்புடைய விவசாயிகளுக்கும் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு உறுதி செய்துள்ளார். அதன் பின் கீரப்பாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் விதைகள் மாற்றுப் பயிர் விதைகள் திரவ உயிர் உரங்கள் மற்றும் இதர இடுப்பொருட்கள் குறுவை சாகுபடிக்கு தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டிருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தையும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து சேத்தியா தோப்பில் உள்ள தனியார் உரக்கடைகளில் விற்பனை முனைய கருவியில் உள்ள உர இருப்பு மற்றும் கிடங்கில் உள்ள இருப்பை ஒப்பீடு செய்து சரி பார்த்தார். அப்போது மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் உரம் விற்பனை செய்யப்படும் போது நிர்ணயிக்கப்பட்டு அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்தால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து சேத்தியா தோப்பு மற்றும் தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கத்தில் குருவை தொகுப்பு திட்டத்திற்காக பெறப்பட்டுள்ள ரசாயன உரங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு திட்டத்திற்கு தேவையான உரங்கள் அவ்வப்போது டார்பெட் நிறுவனத்தில் இருந்து பெற்று காலத்தே விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தொடர்புடைய கூட்டுறவு நிறுவன சங்கங்களின் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன், வேளாண்மை துணை இயக்குனர்கள், டெல்டா வட்டார வேளாண்மையின் உதவி இயக்குனர்கள், வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடன் இருந்துள்ளனர்.