ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். இதற்காக 1,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் 5 வருடங்களுக்குள் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அதன்பிறகு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உரிய முறையில் தேர்தல் நடத்தப்படும் எனவும், 400-க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்களில் 190 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், மகளிர் சுய உதவி குழுவிற்கு கடந்த வருடம் 20,000 கோடி கடன் வழங்குவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த பிறகு அமைச்சர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.