போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூடானை கடந்த 30 வருடங்களாக ஓமல் அல் பஷீர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஓமல் அல் பஷீரை ஆட்சியில் இருந்து தூக்கி விட்டு ராணுவத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் சேர்ந்து இடைக்கால அரசை நிறுவி ஆட்சி செய்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அரசு முழுமையாக கலைக்கப்பட்டு ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றினர். இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கார்டூமில் ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை கலைந்து செல்லுமாறு ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை கண்டு கொள்ளாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ராணுவத்தினர் பொதுமக்கள் மீது பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.