கழிவு நீரை மறுசுழற்சி செய்து, அதிலிருந்து கிடைக்கும் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஜில்பீருக்கு மதுபிரியர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டில் கழிவுநீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரை பயன்படுத்தி பீர் தயாரிக்கப்பட்டு, “நியூப்ரூ” என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு ஆலையிலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன் மூலமாக வடிகட்டப்பட்ட சுத்தமான நீராகும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்டின் பெயர்தான் நியூவாட்டர் எனப்படுகிறது. இந்த குடிநீரை பீர் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.
சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்த சிறப்பு பீரை அறிமுகம் செய்துள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பீர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. இந்த பீர் மிகவும் சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பீருக்கு தற்போது மதுபிரியர்கள் மத்தியில் பயங்கரமாக எதிர்பார்த்ததை விட, அதிகளவில் வரவேற்பு கிடைப்பதாக கூறப்படுகிறது. இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகும். இந்த நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியதால், கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
மேலும் கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகின்றது. மேலும் அது குடிநீராக மாறுவதற்கு முன்பு பல்வேறு சுத்திகரிப்பு நிலைகளில் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயன்பாட்டிற்கு வருகின்றது.