உணவுத்துறை அதிகாரிகள் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட நியமன அலுவலர் இளங்கோவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் ஓட்டல்களில் கெட்டுப்போன நூடுல்ஸ், சாதம், மிச்சர் போன்றவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் கெட்டுப்போன 5கிலோ சாதம் உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து தரையில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். மேலும் கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியதோடு மட்டும் இல்லாமல் இனிவரும் காலங்களில் இது போன்ற உணவுகளை விற்பனை செய்தால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார் .