தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் ஒவ்வொரு வருடம் 100 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இங்கு எம்.எஸ், எம்.டி ஆகிய முதுநிலை படிப்புகளில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம் போன்ற பாடப்பிரிவுகள் இருக்கிறது. மேலும் இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை, முதல் நிலை மருத்துவ பாட பிரிவை தொடங்க இந்த தேசிய மருத்துவ ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து முதுநிலை மருத்துவ பாடப் பிரிவை தொடங்க அனுமதி அளிப்பது பற்றி தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த பேராசிரியர் ஆஷிமா சர்மா தலைமையிலான குழுவினர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி டீன் அமுதவல்லி கண்காணிப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்துள்ளனர். இந்த ஆய்வின் அடிப்படையில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை முதல் நிலைப்பட்ட மேற்படிப்புக்கான அனுமதி இந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்டால் அதற்குரிய மாணவர் சேர்க்கை தொடரும். இதன் மூலமாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொடர்பான மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு அதிக அளவில் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.