லக்கிம்பூர்கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு பின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கடும் நடவடிக்கை எடுப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் வாயிலாக கடந்த புதன்கிழமையன்று காவல்துறையினர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இவ்விவரகாரத்தில் இறந்த சிறுமியின் உடன் பிறந்த சகோதரி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதில் குற்றம்சாட்டப்பட்ட சகோதரி மற்ற குற்றவாளிகளுடன் தாகாத உறவு வைத்துக்கொண்டு தன் தங்கையிடம் மாட்டிக் கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் கூறியதாவது ” சம்பவ இடத்திற்கு உடனே நாய் படை, தடயவியல் குழு மற்றும் பிற குழுக்கள் குவிக்கப்பட்டது. சிறுமியை 4 பேர் பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியின் மூத்த சகோதரியும் இதில் உடன் இருந்துள்ளார். வயல் வெளியில் 2 பேர் காவலுக்கு நின்றிருந்தனர். அதன்பின் அந்த சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதில் சிறுமியின் மூத்த சகோதரி கிராமத்திலுள்ள 5 பேருடன் தொடர்பு வைத்திருந்ததே இச்சம்பவத்திற்கு காரணம்” என கூறினார்.
இதனிடையில் சிறுமியின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த அக்கா ரஜினி, சிறுமியை தன்னுடன் கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருடைய கூட்டாளிகள் அச்சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி அவரது சகோதரி என எஸ்பி தெரிவித்தார். இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் சவுகான், அமர்சிங், அங்கித், சந்தீப் சவுகான், தீபு சவுகான், அர்ஜுன் மற்றும் சகோதரி ரஜினி போன்றோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையில் இவ்வழக்கை தீர்த்து வைக்கும் போலீஸ் குழுவுக்கு ரூபாய் 20,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று எஸ்பி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.