சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்ணமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்த சிவபாலன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். அடிக்கடி சென்னை வந்து அண்ணா சாலையில் உள்ள கம்பெனி ஒன்றில் மருத்துவ உபகரணங்களை வாங்கி செல்வார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அரை எடுத்து தங்கி உள்ளார். அதன் பின் இரவு 8:30 மணியளவில் அவர் தனது நண்பரின் பைக்கில் ராயப்பேட்டைக்கு மற்றொரு நபரை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது பை ஒன்றிற்குள் 20. 22 லட்சம் ரொக்க பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார். அண்ணா சாலை பாரத ஸ்டேட் வங்கி அருகில் செல்லும்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் சிவபாலனை வழிமறித்துள்ளனர். அதன் பின் அவரது கையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் காயம் அடைந்த சிவபாலன் மோட்டார் சைக்கிளை விட்டு கீழே சாய்ந்துள்ளார். உடனே அந்த ஆறு பேர் கும்பல் சிவபாலன் பையில் வைத்திருந்த 20. 22 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். சிவபாலன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சாலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிவபாலன் பணம் கொண்டு செல்வதை தெரிந்துகொண்டு தான் அவரை பின்தொடர்ந்து சென்று இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். சிவபாலனும் தான் கொண்டு சென்ற பணம் பற்றி முறையாக பதில் சொல்லாமல் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாக தெரிய வருகிறது. இதனால் அவர் கொண்டு சென்ற 20.22 லட்சம் பணம் யாருடையது எனவும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தனிப்படை போலீசார் காஞ்சிபுரத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.