5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயப்படத் தேவையில்லை என்று பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் ஒரு வித அச்சத்தில் இருக்கின்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பொதுத்தேர்வால் இடை நிற்றல் அதிகரிக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். அதே போல மற்ற மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் மாணவர்களுடைய கற்றல் திறனை சோதித்து அறிவதற்காக மட்டுமே பொது தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி ஏதுவாக தேர்வு நடத்தப்படுகிறது.
மேலும் பொதுத்தேர்வு அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதற்காக அச்சப்படத் தேவையில்லை என்ற விளக்கத்தை பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளார்