ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுந்தரராஜபட்டினம் பகுதியில் முடி திருத்தம் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவியும், சுரேகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேகாவுக்கு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது அவரின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார். இதனையடுத்து ரவியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் வீட்டில் நடந்தது. இருப்பினும் சுரேகா மிகுந்த மன வேதனையுடன் பொதுத்தேர்வை எப்படியாவது எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தந்தையின் சடலம் வீட்டில் இருக்கும்போதே பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.
இந்த பொதுத் தேர்வில் சுரேகா தேர்ச்சி பெற்று 228 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் குடும்ப வறுமையின் காரணமாக தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட, சுரேகா ஒரு ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் தனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறி தன்னுடைய உயர்கல்வி படிப்பிற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக சிறுமியின் உயர்கல்வி செலவை எம்.எல்.ஏ முருகேசன் ஏற்றுக்கொள்வதாக தற்போது கூறியுள்ளார்.