பிரபல நடிகர் விஜய் பாபு நடிகராகவும், இயக்குனராகவும் மலையாள சினிமாவில் வலம் வருகிறார். இவரது தயாரிப்பு நிறுவனம் மூலமாக ஒரு நடிகை நடித்து வந்தார். அந்த நடிகை நடிகர் விஜய் பாபு மீது கடந்த ஏப்ரல் மாதம் கொச்சி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் நடிகர் விஜய் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நடிகர் விஜய் பாபு சமூக வலைதளங்களில் நடிகையின் பெயரை குறிப்பிட்டு அந்த நடிகை பொய் சொல்கிறார் எனவும், அவரின் சம்மதத்துடனே நான் பாலியல் உறவு கொண்டேன் எனவும் கூறினார்.
இதன் காரணமாக நடிகர் விஜய் பாபுவின் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு மற்றொரு பெண்ணும் நடிகர் விஜய் பாபு மீது எர்ணாகுளம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதனால் நடிகர் விஜய் பாபுவை நேரில் ஆஜராகுமாறு பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் ,அவர் நேரில் ஆஜராகாமல் துபாய்க்குச் சென்று விட்டார். இதன் காரணமாக விஜய் பாபுவிடம் விசாரணை செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறினர். கடந்த மே மாதம் நடிகர் விஜய் பாவுக்கு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கப்பட்டதால், அவர் துபாயில் இருந்து கேரளாவுக்கு திரும்பினார்.
அவர் கேரளாவுக்கு வந்தவுடனே எர்ணாகுளம் காவல்துறையினர் விஜய் பாபுவை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இவரிடம் ஜூன் 27-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டு இருந்தார். மேலும் நடிகர் விஜய் பாபு பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சமூக வலைதளங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், கேரளாவை விட்டு வெளியேறக்கூடாது என்றும் கூறி நீதிபதி அவரை விடுதலை செய்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.