லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசூர் கிராமத்தில் வசிக்கும் கலைமணி என்பவருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த மனை பட்டாவில் கலைவாணியின் பெயர் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதற்கு அவரது மகன் யுவராஜ் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம, வட்ட ஆவணங்களில் திருத்தம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என பதிவறை எழுத்தாளரான சிவஞானவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் பணத்தை யுவராஜ் சிவஞானவேலிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதனை அடுத்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிக்குமார் சிவஞானவேலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.