தமிழகத்தில் இந்த வருட தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் 8,000 ம் பேர் பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வின் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
அதாவது புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக மாணவர்கள் தங்களது குறைகளை எழுப்பவேண்டும். தற்போது மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சிகளில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இதற்கிடையே அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு இந்த வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் வழங்கப்படும்.
மேலும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது அரசு பள்ளிகளில் 13,331 புதிய ஆசிரியர்களை நியமிக்க முதல்வரிடம் அனுமதி பெற்று இருக்கின்ற நிலையில் இந்த செயல்முறையை முடிப்பதற்கு ஐந்து மாதங்கள் வரை ஆகலாம். அதுவரையிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பள்ளி மேலாண்மை குழு சார்பில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் 8000 பேர் பணி நியமனம் செய்யப்படுகின்றனர் என கூறியுள்ளார்.