கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இரண்டு விவசாயிகள் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை ஊராட்சியில் இருக்கும் அருணா என்ற மலை கிராமத்தில் ராமசாமி(63), சின்னசாமி(53), சீனிவாசன்(30), சாமி(40) ஆகியோர் வசித்து வந்துள்ளனர் விவசாயிகளான இவர்கள் சரக்கு வேன் மூலம் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் தலைவாசல் தினசரி மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை இளங்கோ என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மணிவிழுந்தான் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே சென்றபோது சரக்கு வேனின் டயர் வெடிப்பு பழுதானது. இதனால் இளங்கோ வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி மற்றொரு டயரை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ராமசாமி, சின்னசாமி ஆகிய இரண்டு பேரும் கீழே இறங்கி வேனின் பின்னால் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக ராமசாமி மற்றும் சின்னசாமி மீது மோதியதுடன், சரக்கு வேனின் பின்புறமும் லேசாக மோதி நின்றது.
இந்த விபத்தில் உடல் நசுங்கி இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சுடலைமுத்து என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.