தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயக்கப்படும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையத்தை மானியத்தில் அமைப்பதற்கான புதிய திட்டம் செயல்படுத்துவதாக கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ் அரசின் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுது நீக்கும் மையத்தை இப்பொழுது மானியத்தில் அமைக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதை விவசாயிகள் பயன்படுத்தி தங்கள் விளைநிலத்தில் பழுது நீக்கி பராமரிக்கவும் விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளும் இன்றி குறித்த நேரத்தில் செய்து முடிக்கவும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானத்தை ஈட்டித் தந்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த பராமரிப்பு மையமானது அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மானியத்தில் இந்த மையங்கள் அமைத்து தரப்படும். இந்த மையங்களானது ரூபாய் 8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றது.
பயனாளர்கள் தங்கள் அருகில் இருக்கும் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று பயனாளிகளுக்கு பராமரிப்பு மையம் மானியத்தில் அமைத்து தரப்படும். இதை பயனாளர்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுமாறு ஆட்சியர் கூறியுள்ளார்.