கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலின் 2 பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ரயிலில் பயணித்த 59 கரசேவகர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பெரும் மத கலவரத்தை ஏற்படுத்தியது. அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பகுதியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் கலவரத்தால் வெட்டிக் எரிக்கப்பட்டனர். மேலும் இந்த கலவரத்தில் 3 நாட்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு கலவரம் நடந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு 2012 ஆம் ஆண்டு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி உள்ளிட்டு 63 மீது எந்தவித குற்றமும் இல்லை என்று அந்த விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த கலவரம் அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையை உள்ளடக்கிய ஒரு பெரிய சதி என்றும் விசாரணை புதிதாக தொடங்க வேண்டும் என்றும் கலவரத்தின் போது உயிரிழந்த காங்கிரஸ் எம்பி எஹ்சன மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று இவ்வழக்கு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இந்த மனு விசாரணைக்கு தகுதியற்றது என்று தள்ளுபடி செய்துள்ளது.