நடிகை மற்றும் மாடல் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்ற வருடம் ஆகஸ்டு மாதம் மீராமிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் அவர்கள் மீது சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் குற்றச்சாட்டு பதிவுக்காக இருவரும் ஆஜராக சென்னை செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த வகையில் அவ்வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன், சாம்அபிஷேக் போன்றோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் வழக்கு விபரத்தை நீதிபதி படித்து காண்பித்தார். அதன்பின் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுப்பதாகக்கூறி விசாரணையை எதிர்கொள்வதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விசாரணைக்காக வழக்கை அடுத்த மாதம் 18-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.