சாப்பாடு வாங்கி வந்த தகராறில் பிளஸ் 1 மாணவனை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் மகன் மாதவன். இவர் பிளஸ்1 தேர்வு எழுதிய நிலையில் சென்ற 18-ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற மாதவன் திரும்பி வீட்டிற்கு வராததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்கள்.
இதனிடையே சென்ற 20ஆம் தேதி கல்லறைத் தோட்டத்தின் பின்புறமாக தனியாருக்குச் சொந்தமான பாழடைந்த கிணற்றில் பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்து பிணத்தை மீட்டனர். அது காணாமல் போன மாதவன் என்பது தெரியவந்தது.
மாதவனின் பெற்றோர் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவனிடம் கடைசியாக போனில் பேசியவர்களின் தொலைபேசி எண்ணை சேகரித்து 3 பேரை விசாரித்ததில் மூன்று பேரும் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்கள். அவர்களில் 17 வயது சிறுவர்கள் 2 பேர் மற்றும் பிச்சை என்ற 23 வயது இளைஞர் ஒருவர்.
இதையடுத்து போலீசில் வாக்குமூலம் அளித்த அவர்கள் கூறியதாவது, சென்ற 18ஆம் தேதி சாப்பாடு வாங்குவதற்காக மாதவனிடம் ரூபாய் 1000 கொடுத்தோம். மாதவனும் சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தார். பின் கிணற்றுக்கு அருகே அமர்ந்து சாப்பிடும்போது சாப்பாடு வாங்கியது பற்றி மாதவனுக்கும் எங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவனைத் தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்தோம் என கூறியுள்ளனர்.