வடகொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்டுவிட்டதாக அறிவிப்பதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் வடகொரியாவில் கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் பரவத் தொடங்கியது. எனினும், அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் 12ம் தேதியன்று தெரிவித்தார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், தடுப்பூசி மற்றும் தகுந்த சிகிச்சைகள் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் அங்கு ஒரு லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், அதனை வடகொரியா மறைத்துக்கொண்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
எனினும், விதிமுறைகளை கடுமையாகக் கடைப்பிடித்து, பாரம்பரிய சிகிச்சை முறைகள் மூலம் பலி எண்ணிக்கை அங்கு பெருமளவு குறைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மொத்தமாக பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதாக அறிவிக்க அந்நாடு தயாராகிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.