லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்திலிருந்து மரக் கதவுகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருமலை என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சலவாதி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது லாரி திடீரென இடதுபுறம் திரும்பியது. அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த திருஞானம்(67), அவரது மனைவி கலாவதி(61), உறவினர்களான முத்துலட்சுமி(33), நிதன்யா(4) கார் ஓட்டுநர் மணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் குழந்தை ஹரினி(2) அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலாவதி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.