குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள்தான் நம் நாட்டை பிளந்தவர்கள் என்று யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என முப்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சி தலைவர்களும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களின் மூததையர்கள்தான் இந்தியாவை பிளவுபடுத்தினார்கள். அவர்கள் வளர்ந்துவரும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவுள்ளனர்.
டெல்லியில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நாடு அடைந்துள்ள வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாதவர்களே இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவுகிறார்” என்றார்.