உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கந்தூர் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாட்டி குப்பச்சி(89) என்பவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு மோகன் என்ற தம்பி உள்ளார். அவர் குப்பச்சி பாட்டி உயிருடன் இருக்கும் போதே கடந்த 2008-ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டதாக கூறி போலியான இறப்பு சான்றிதழை தயாரித்துள்ளார். இதனை அடுத்து எனது தாயார் கோதாவரி, தங்கை சுகன்யா ஆகியோரின் பெயர்களை இணைத்து எனது பெயரை நீக்கிவிட்டு மோகன் வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளார்.
இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே எனது தந்தையின் வாரிசு சான்றிதழில் எனது பெயரை நீக்கிவிட்டு போலியான வாரிசு சான்றிதழ் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரேஷ் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.