குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியை பிடிக்க பொதுமக்கள் உதவியை சி.பி.சி.ஐடி நாடியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். அந்த விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 99 தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த 25ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதில் முக்கிய குற்றவாளியாக இருந்த இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடி போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
இடைத்தரகர் ஜெயக்குமார் ஏற்கனவே குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளதால் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியதில், 60-க்கும் மேற்பட்ட பேனாக்கள்,பென்டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஜெயகுமாரின் புகைப்படத்தை சென்னை மாநகரம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் சுவரொட்டியாக ஒட்டியுள்ளனர். அதில் இவரை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கவுள்ளதாகவும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.