ஏர் இந்தியா புதிதாக 200 விமானங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு வசம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய டாட்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் விமான சேவையை சீரமைக்கும் வகையில் புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக போயிங் ஏர்பஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் புதிதாக விமானங்கள் வாங்கப்படவில்லை. டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா 200க்கும் மேற்பட்ட புதிய விமானங்களை வாங்குவது பற்றி பரிசீலனை செய்து வருவதாகவும் அவற்றில் 70 சதவிகிதம் சிறிய விமானங்கள் எனவும் விமானத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏர்பஸ் ஏ380 பெரிய விமானத்தை வாங்குவது குறித்து ஏர் இந்தியா முடிவெடுக்கவில்லை.
இருந்தாலும் சிறிய ரக விமானங்களை வாங்குவதற்கு ஏர்பஸ் மற்றும் போயிங் உடன் பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்று வருகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏர்பஸ் a350 போன்ற அகலமான விமானம் இந்திய-அமெரிக்க வழிகள் போன்ற நீண்ட தூரம் பயணிக்க அனுமதிக்கும் ஒரு பெரிய எரிபொருள் தொட்டியை கொண்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடமிருந்து 68 விமானங்களையும் ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்களையும் சேர்த்து 111 விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர்களை 2006ஆம் வருடத்திற்குப் பின் ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி ஏர் இந்தியா ஏலத்தில் வெற்றி பெற்றதையடுத்து ஜனவரி 27-ஆம் தேதி டாடா குழுமம் ஏர் இந்தியாவை கைப்பற்றியுள்ளது.