இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை அதிகரிப்பால் நாளையிலிருந்து பள்ளிகளும் அரசு அலுவலகங்களும் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் முடக்கப்பட்டதால் மக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும், தினசரி 13 மணி நேரங்கள் மின் தடை ஏற்படுகிறது. எனவே, நாளை முதல் நாடு முழுக்க அரசு அலுவலகங்கள் அடைக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்திருக்கிறது. அதேசமயத்தில் சுகாதாரத் துறை குறித்த அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கல்வித்துறை, பள்ளிகளும் அடைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், மின்வெட்டு அதிக நேரங்களுக்கு ஏற்படுவதால் இணையதள வகுப்புகளை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. நிதி நெருக்கடி, எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.