புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டி கிராமத்தில் 80 வயதான முதியவர் நல்லு வசித்து வருகிறார். இவருடைய மனைவி அழகு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள், மூன்று மகள்கள், 8 பேரன் பேத்திகள் உள்ளனர். இந் நிலையில் இந்த முதியவர் தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும் இவர் தனிநபர் வீடு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது வீட்டிலேயே உள்ளார். முதியவர் சிறுவயதிலேயே உணவு உண்பதை தவிர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் நாளடைவில் முற்றிலுமாக உணவு உண்பதை தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை என்றும் கூறுகிறார்கள். இவர் பால், தேநீர், தண்ணீர் மட்டுமே சாப்பிடுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு உணவு உண்ணாமல் இருப்பதால் உடல்நலம் சார்ந்த பிரச்சினை இருக்கும் என்று கருதி அவரது மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறி அனுப்பியுள்ளார்.
இது குறித்து நல்லு கூறுகையில், உணவு உண்ண கூடாது என்று இறைவன் கொடுத்த உத்தரவு என்றும் அதை மீறினால் இறைவன் தண்டிப்பான் என்றும் வினோதமாக கூறியுள்ளார். அவருடைய கடைசி மகன் தன்னுடைய வாழ்நாளில் தன்னுடைய தந்தை ஒருமுறை கூட உணவு உண்பதை பார்த்ததில்லை என்று கூறுகிறார். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.