Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலி நகையை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட தம்பதி…. “கணவர் கைது மனைவிக்கு போலீஸார் வலைவீச்சு”….!!!!!!

போலி நகையை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜா. இவர் முதல் மனைவியை பிரிந்த நிலையில் அனு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சென்ற ஆறாம் தேதி கருங்கலில் உள்ள நகைக்கடையில் 9 கிராம் எடையுள்ள இரண்டு காப்புகள் அடமானம் வைத்து ரூபாய் 60,000 பெற்றிருக்கின்றனர். கடையின் உரிமையாளர் சந்தேகமடைந்து நகையை உரசிப்பார்த்திருக்கின்றார். ஆனால் அசல் போலவே இருந்திருக்கின்றது. அவரின் சந்தேகம் தீராத காரணத்தினால் சில நாட்களுக்கு முன்பாக நகையை வெட்டி பார்த்திருக்கின்றார்.

அப்போது மேல்பகுதி தங்கமும் உள்பகுதி முழுவதும் செம்பாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, தான் ஏமாற்றப்பட்டதை போல் மற்றவர்களும் ஏமாந்து இருப்பார்களோ என நகை அடமான கடை நடத்துபவர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் நகையின் புகைப்படத்தை பகிர்ந்து விவரத்தை பகிர்ந்திருக்கிறார். இதைப்பார்த்த தேங்காப்பட்டணம், பைங்குளம் பகுதியில் இருக்கும் அடகு கடை உரிமையாளர்களும் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்தனர். உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து போலீசார் போலி நகையை அடமானம் வைத்து பணம் மோசடி செய்த தம்பதியை தேடினர்.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் ஜேசுராஜாவை போலீசார் கைது செய்தனர். பின் அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் போலி பெயர்களைக் கொண்டு நகையை அடமானம் வைத்து மனைவியுடன் சேர்ந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர் இதுபோல வேறு எங்கெல்லாம் அடமானம் வைத்து ஏமாற்றி இருக்கின்றார் எனவும் ஒரே மாதிரியான தங்க காப்பினை கொடுத்தது யார் எனவும் கும்பலாக செயல்படுகிறார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |