தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியபோது, ரயில்வேயில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் விதமாக கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்களுக்கு ரூபாய் ஒன்றரை கோடி வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய தளத்தின் மூலமாக கண்டுபிடிப்பாளர்கள் எந்தவித முறைகேடும் இல்லாமல் நியாயமான முறையில் தேர்ந்தெடுக்க இருக்கின்றோம். அதேபோல் கண்டுபிடிப்பாளர்கள் உருவாக்குகின்ற தொழில்நுட்பங்களுக்கு அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுகிறது.
ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல்கள் பற்றி தற்போது நடத்தப்படும் ஆய்வுகள் அனைத்தும் அல்ட்ராசோனிக் கருவிகளின் உதவியால் நடைபெற்றுவருகிறது. இவற்றை தானியங்கி முறையில் செயல்படுத்தி விரிசல்கள் பற்றி முன்பே அறியும் விதமாக தீர்வுகளை காண இருக்கின்றோம். மேலும் கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு ரயில்வே பாதுகாப்பு படையினர் தினமும் அவர்களது பணியை சிறப்பாக மேற்கொள்கின்றனர். அதன்மூலமாக நடைபெறும் அசம்பாவிதங்களை தடுத்து திறம்பட பணியாற்றி வருகின்றார்கள். கண்காணிப்பு கேமராக்கள் 100% பயன்பாட்டில் இருந்து வருகிறது என கூறியுள்ளார்.
மேலும் நிருபர்கள் மின்சார ரயில்களில் டிடிஆர் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்பவர்களிடம் இருந்து செல்போன் அல்லது ஆதார் கார்டுகளை பறித்து விடுகின்றனர் என கூறியுள்ளனர். இதற்கு பதிலளித்த அவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பதே டிடிஆர் களின் வேலையாகும். இதுபற்றி இதுவரை எங்களிடம் புகார்கள் எழுப்பப்படவில்லை. எனவே இதுபற்றி விசாரணை நடத்தி பிரச்சினைகள் இருந்தால் கண்டிப்பாக தீர்வு காணப்படும் என கூறியுள்ளார்.