நடிகை நயன்தாரா 7 ஆண்டுகளாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை அண்மையில் மாமல்லபுரத்திலுள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து முகூர்த்தம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். அங்கு திருப்பதி மாடவீதிகளில் கணவருடன் போட்டோஷீட் நடத்தியபோது நயன்தாரா காலில் காலணியுடன் இருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் திருப்பதி தேவஸ்தானமானது நயன்தாராவின் செயலை கண்டித்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக எச்சரித்தது.
இச்சம்பவத்துக்கு விக்னேஷ்சிவன் மன்னிப்பு கேட்டார். இப்போது நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதியினர் கேரளா சென்று இருக்கின்றனர். இந்த நிலையில் நயன்தாரா மீது மற்றொரு புகார் கிளம்பிஉள்ளது. மாமல்லபுரத்தில் திருமணம் நடைபெற்றபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு போக முடியவில்லை. இதில் கடற்கரை பொது இடம் ஆகும். அங்கு நயன்தாராவின் திருமணம் நடைபெற்ற நாளில் பொதுமக்கள் போக அனுமதிக்கவில்லை. இது மனிதஉரிமை மீறல் என தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீண்டுமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.