மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டு கிராமத்தில் விவசாயியான செல்வமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வயலில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முந்தினம் மாலை செல்வமணி மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை ஓட்டி வந்து கொட்டகையில் அடைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது 15 ஆடுகளும் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து செல்வமணி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடைத்துறை மருத்துவர் தலைமையிலான குழுவினர் ஆடுகளின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைத்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, கல்வராயன் மலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. எனவே வனத்துறையினர் மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்து கண்காணித்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.